Tuesday, October 27, 2009

திருட்டு க‌ண‌க்கு எழுதிவிட்டான்!!!!

ஆயிர‌ம் பெண்க‌ளை ப‌டைக்க‌ வைத்திருந்த‌ அழ‌கினை கொண்டு‍‍

என்ன‌வ‌ளை ப‌டைத்துவிட்டு இறைவ‌ன்

திருட்டு க‌ண‌க்கு எழுதிவிட்டான்!!!!

Friday, October 16, 2009

இது 'தீபாவ‌ளி' அல்ல‌ "தீவின் வ‌லி"

ம‌ன‌திலும் தீப‌த்தின் ஒளி ப‌ர‌வுவ‌து தான் தீபாவ‌ளி!‍‍‍ - ஆனால்
ஈழ‌ தீவில் க‌ருக்குழ‌ந்தைக்குள்ளும் வ‌லி ப‌ர‌வியுள்ள‌து
என் சொந்த‌ம் அங்கே க‌ருகும் போது
என்னில் எங்க‌ன‌ம் ம‌கிழ்ச்சி பெருகும்?
இது 'தீபாவ‌ளி' அல்ல‌ "தீவின் வ‌லி"

Friday, July 24, 2009

கவிதை கதை !


கூட்டமாய் செல்கின்றனர் பெண்கள் சலசலக்கும் நதிப்போல கலகலப்பாய் பேசியவாறு! நதியிடை ஓர் மின்னல் கீற்று!ஒருத்தி மட்டும் திரும்பி பார்த்தாள்! அந்த பார்வை ஒன்றும் என்னை வதைத்து விடவில்லை, ஆனால் என் மனதில் ஏதோ விதைத்துவிட்டது. அவள் பெயர் அறிவழகி! விதைத்த விதை வளர்ந்து இதயத்தை நெரித்த போதுதான் தெரிந்தது அது காதல் விதை என்று! அவளை நினைக்க வேண்டுமென்று தோன்றவிலை..ஆனால் நினைவெல்லாம் நிறைந்திருந்தாள் பள்ளம் கண்டு பாயும் வெள்ளம் போல!!! அவளை காதலிக்கிறேன் என முடிவு செய்யுமுன் முடிந்துவிட்டது ஓராண்டு.இவ்வோராண்டில் மழையிருந்ததோ அல்லையோ அடிக்கடி மின்னல் மின்னியது.சரி காதலை சொல்ல வேண்டுமே! சொல்லாதக்காதல் விதைக்காத விதையல்லவா?! சொல்லிவிட வேண்டும் எப்படி சொல்வது!!!! வீரத்திற்கு பெயர் சொல்லும் ஊரில் பிறந்த என் மனதில் கடுகளவு கூட தைரியமில்லையா? கன்னியின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் மடுவாம் என்றானே பாவேந்தன் !! ஆனால் இங்கே கடைக்கண் பார்வை பட்ட பின்புதானே மாமலையாயிருந்த தைரியம் அரசின் நலத்திட்ட தொகை ஏழை விவசாயின் கையில் கிடைப்பது போல தேய்ந்து அரை விழுக்காடாகிவிட்டது..... இறுதியாய் மறவன் மலைக்கலாமா? என என்னை நானேத் தேற்றிக்கொண்டேன்! அதோ சாலையின் துவக்கத்தில் அவள்!அந்த தார் சாலை அவள் பாதம் பட்டபின் தாமரைப் படர் குளமாய் தோன்றியது!என் அருகில் வந்துவிட்டாள்! நிச்சயம் என்னைவிட தைரியசலிதான். பேச வேண்டுமே ! நான் முதலில் காதலித்த தாய் மொழியாம் தமிழ் மொழி மறந்தே போய் விட்டது! நான் மேடைகளில் கூடப் பேசியிருக்கிறேனே! பேசி பேசியே கொல்கிறான் என எவரேனும் கூறாமல் என் பொழுது அடங்காதே! அது F.M பிரபலமடையாத காலம் இல்லையெனில் என் பெயரை F.M என்றே மாற்றியிருப்பார்கள்! இன்றோ ஒரு வார்த்தை கூட நினைவில் வரவில்லை வாய்க்கும் வார்த்தைக்குமிடையே சீனப்பெருஞ்சுவர்..! இறுதியாக அவளே ஆரம்பித்தாள் "ஏப்படி இருக்கிறீங்க?" என்றாள். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே! பாரதியின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. பதில் சீனப்பெருஞ்சுவரைத் தாண்ட முடியாமல் தவித்தது. தலையை மட்டும் அசைத்தேன் , கடந்து சென்று விட்டாள்.சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தாள் மீண்டும் மின்னல் கீற்று! நான் சுயநினைவிற்கு வந்தேன் .
அன்று முழுவதும் என்னுடைய இயலாமையை எண்ணி வருந்தினாலும், அவளது குரல் என் மனதை அலையாய் வருடிக் கொண்டிருந்தது.அவள் என்னை வெறுக்கவில்லை உறுதி! காதலிக்கின்றாளா? உறுதி செய்ய வேண்டுமென உள்ளம் உத்தரவிட்டது.
மீண்டும் ஒரு சந்திப்பு! இன்று எங்களை தவிற உலகில் யாருமேயில்லை என்ற எண்ணம் எனக்கு. சீனச்சுவரை இன்றாவது உடைத்து தமிழுக்கு விடுதலையளிக்க வேண்டும்!
நெருங்கிவிட்டாள்! இன்றும் தமிழின் விடுதலை ஒத்திவைக்கப்பட்டு விட்டது.ஆனால் அவளே பேசினாள்...."உங்களை விரும்புகிறேன்" என்றாள், "என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?" எனக் கேட்டாள். அவள் வார்த்தைகளே வக்கீலாகி சீனச் சுவருடைத்து என் தமிழை விடுவித்தது. நானும் பேசினேன், ஆனால் வார்த்தைகள் ரேஷனில் வழங்கப்படும் அரிசிப் போல அளவு குறைவாகவே வந்தது.
என் காதலை உறுதி செய்தேன். அவள் முகத்தை இன்றுதான் முழுமையாக பார்த்தேன்!
"நிலவின் மீது நட்சத்திரங்களா?-இல்லை இல்லை
என்னவள் முகத்தில் பரு"
அவள் கண்களை பார்த்தேன்! உலகின் மிகப்பெரிய ஆயுத
உற்பத்தியாளன் இறைவன்தான்! பெண்களின் கண்களுக்கு
மட்டுமே விற்பனைச் செய்துள்ளான்
என் கண்களை தான் பார்வையால் தாக்கினாள்!
காயங்கள் முழுவதும் இதயத்தில்!
அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது.
இவ்வளவு மகிழ்ச்சியை தந்த இறைவன் சராசரி 65 ஆண்டு
ஆயுள்தானே கொடுத்துள்ளான்! விவரிக்க காலம் போதாது !
எழுத ஆரம்பித்தால் உலகில் காகிதங்கள் மிஞ்சாது!!
காதலர்களாய் கரம் பிடித்து ஒரு நாள் தோட்டத்திலே
நடந்து சென்றுக்கொண்டிருந்தோம்! அவளிடம் "அன்பே ஒரு
வேண்டுகோள் செய்வேன் மறுக்கக் கூடாது"
என்றேன்! "ம்...சரி" என்றாள்.
"தயவு செய்து இனி என் தோட்டத்து வழியே நடக்காதே!-உன்
பாதம் பட்ட மண்ணில் பயிரிட்டால் பாகற்காய் கூட இனிக்கிறது என்றேன்"
வெட்கப்பட்டாள்! ரசித்தேன் ! ஒரு உலக சுற்றுலா சென்று
வந்த திருப்தி ஏற்பட்டது.
தொடர்ந்த காலங்கள் என் பிறவி பயனை அடைந்துவிட்டோம்
எனற திருப்தியை தந்தன.
மக்கள் வாழ்வு சிறப்பது பிடிக்காத அரசியல்வாதி போல
எங்கள் காதல் வாழ்வை காலத்தால் சகித்து கொள்ள
முடியவில்லை!!!!
எங்க‌ள் காத‌லுக்கு குறுக்கே வேலியை வேலை மூல‌ம் த‌யார் செய்த‌து கால‌ம்.ஆம் என‌க்கு சென்னையில் வேலை கிடைத்த‌து.
இற‌ப்பை விட‌ பிரிவு கொடியது என்ப‌தை உண‌ர்ந்து கொண்டேன்.
நாளை புற‌ப்ப‌ட‌ வேண்டும்....
இருவ‌ரும் ச‌ந்தித்தோம்! வார்தைக‌ள் உள்ளிருப்பு போராட்ட‌ம் செய்த‌ன‌| அவ‌ள் க‌ண்க‌ளில் ம‌ட்டும் காட்டாற்று வெள்ள‌ம் க‌ண்ணீராய்!!
என்னால் அணை போட‌ முடிய‌வில்லை..அணைத்துக்கொண்டேன்.!!
அது காட்டாற்றுக்கு குறுக்கே போட‌ப்ப‌ட்ட‌ ஒரு கை ம‌ண‌ல் போல‌ ,பேசாம‌லே விடை பெற்றோம்.
நான் த‌ங்க‌ போகும் என் நண்ப‌னின் வீட்டு விலாச‌ம் ம‌ட்டும் எழுதி கொடுத்தேன்!
நட‌க்கும் போது திரும்பி பார்த்தாள்...இன்று மின்ன‌ல் இல்லை! ஆனால் க‌ண்க‌ளில் ம‌ட்டும் அடை ம‌ழை!..
அந்த‌ வெள்ள‌ம் நிறைந்து என் இத‌ய‌ம் க‌ன‌த்த‌து.
வேலையில் சேர்ந்தேன்.................
முத‌ல் க‌டித‌ம் வ‌ந்த‌து! அவ‌ள் க‌ண்ணீரில் நனைந்து போக‌ எஞ்சிய‌ ப‌குதி மட்டுமே ப‌டிக்க‌ முடிந்த‌து.ஆனால் முளுவ‌தும் புரிந்த‌து...அது அன்பு ம‌ட்டுமே!!!!
த‌பால் கார‌னுக்கு என் வீட்டிற்கும் அலுவ‌ல‌த்திற்கும் நடப்ப‌து ம‌ட்டுமே தின‌ச‌ரி வேலையான‌து.என‌க்கும் அலுவ‌ல‌க‌ வேலையைவிட‌ க‌டிதம் எழுதும் ப‌ணி அதிக‌மான‌து.
கால‌ங்க‌ள் ஓடின‌ காட்டு குதிரையாய்...! காத‌ல் ம‌ட்டும் த‌னியார் வ‌ங்கியில் பெற்ற‌ க‌ட‌னின் வ‌ட்டி போல‌ க‌ட்டுபாட‌ற்று வ‌ள‌ர்ந்த‌து.
தொட‌ர் விடுமுறை என்றால் என‌க்கு திருவிழா! ‍ஆம்
அலுவ‌ல‌க‌த்தில் இருந்து நேர‌டியாக‌ பேருந்து நிலைய‌ம்தான்.
என்னை க‌ண்ட‌தும் அவ‌ள் முக‌த்தில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புக‌ள் ப‌ளிச்சிடும்.அதை ர‌சிக்க‌வே அடிக்க‌டி விடுமுறை வ‌ராதா என‌ ஏங்குவேன்!
அன்று விடுமுறை நாங்க‌ள் இருவ‌ரும் ஐஸ்கிரீம் பார்ல‌ரில் ச‌ந்தித்து கொண்டோம்!சிறிது நேர‌மே பேசினோம்! ஆனால் இல்லை என‌க் கூறி சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளை க‌ட‌ந்து நின்ற‌து.அவ‌ள் வீட்டிற்கு செல்ல‌ வேண்டும் என‌க்கூறி வேட‌ன் க‌ண்ட‌ மான்போல‌ ப‌த‌றி விடை பெற்றாள்! அவ‌ள் மீத‌ம் வைத்த‌ ஐஸ்கிரீமை சுவைத்தேன்...யார் சொன்ன‌து அமிர்த‌த்தை தேவ‌ர்க‌ள் ம‌ட்டிமே உண்டார்க‌ள் என்று!!!


(தொடரும் .....)

Friday, April 3, 2009

அனாதை தாய் அகமகிழ்ந்தாள்................

அனாதை தாய் அகமகிழ்ந்தாள் அம்மா எனக்கூறி காலில் விழுந்த அரசியல்வாதியை பார்த்து....

அரசியல்வாதி


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சந்திரன் இவன்
தேர்தல் தேதி அறிவித்தவுடன் இவன் வளர்பிறையாய் தோன்றுவான்
வாக்குறுதியெனும் ஒளியை அள்ளி தெளிப்பான்..
குடிசைக்குள் கூட சென்று கெஞ்சுவான்
தேர்தல் அன்று பௌர்ணமியாய் ஜொலிப்பான்.
இவனுக்கு தேய்பிறை மட்டும் இல்லை
தேர்தலுக்கு அடுத்த நாளே அமாவாசைதான்...............

Sunday, March 8, 2009

அம்மா பிச்சைக்காரியாய்...............










பெற்ற பிள்ளை அம்மா என அழைக்காத காரணத்தால்




இவள் அனைவரையும் அம்மா என அழைக்கிறாள்...




தெருவோரப் பிச்சைக்காரியாய்...............


-(மறவை REMI)

Thursday, March 5, 2009

பனித்துளி


தந்தை தூங்கிய பின் நுழைவான்

தந்தை விழித்ததும் மறைவான்...

புல்லின் மீது பனித்துளி.....

(தந்தை= சூரியன்)
-(மறவை REMI)

Monday, March 2, 2009

ATM



அடுத்தவன் பணத்தை தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் காட்சிதரும் பணக்காரன்


மக்கட்தொகை பெருக்கத்தால் சிறுத்துப் போன வங்கியின் உருவம்!!

-(மறவை REMI)

Monday, February 23, 2009

இளையராஜா


இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன்
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?

அம்மாஎன்னும் வார்த்தைக்கு அன்பு எனும்

பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!

வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி

இசையால் தாலாட்டுபவன் நீ!

விருதுகளில் நீ புறக்கணிக்கப் பட்டாய் என்கிறார்கள்!-இல்லை

எல்லோருக்குமான விருது உனக்குமென்றால்

ஏற்குமா? அதை இசை?

மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?

அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!

உனக்கு மட்டும் தானே!!

உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா'-ஆம்

என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'



-(மறவை REMI)

காதலா? நட்பா?




புதிதாய் உருவான கருவின் பால் பேதம் போல்
அவள் இதயத்திலும் காதலா? நட்பா? என
என்னால் கண்டறியமுடியவில்லை!!!

-(மறவை REMI)

Sunday, February 22, 2009

கோலம்




காலை-5.30 மணி..........
தாயின் நெற்றி வருடும் கரமென வீசிய குளிர் தென்றல்!
விடுமுறை நாளின் பள்ளிக் குழந்தை போல விளித்தும்
மூடிக்கொண்டு போர்வை துளை வழியாய் சூரியன்!
சில மைல்களுக்கப்பாலிருந்து மிதந்துவரும் யேசுதாசின் பாடல்
போல ராகம் தாளம் தப்பாத குயில்களின் குரல்
முதல் மணி ஒலித்தப்பின் பள்ளி வளாகம் நுழையும்
மாணவர்கள் போல பரபரப்பாக காகங்கள்
இத்தனையும் என் அறிவுக்கு எட்டவில்லை
கோலப்பொடியுடன் வந்த உன் கோலம் கண்டபின்.......

-(மறவை REMI)

Thursday, February 19, 2009

இசை வேந்தன் கே.ஜே.யேசுதாஸ்


தெய்வீகக் குரலோனே! தெய்வத்தாயே!
சபரியில் ஐயப்பனையும், குருவாயூரில்
குருவாயூரப்பனையும் துகிலுறச் செய்வது உன் தாலாட்டுக் குரலல்லவா!!எனவேத் தான் நீ தெய்வத்தாயானாய்!
உன் வறுமையை திறமையுடன் விதைத்து
பெருமையை அறுவடைச் செய்தவன் நீ!!
உன் குரலெனும் மகுடி கொண்டு மக்கள்
மனங்களை தன் வசமாக்கினாய்!
உன்னை சாதிக்கொண்டு சிறையிட்டனர்
நீயோ 'சாதி'த்து அந்த சிறையுடைத்து
பவணி வந்தாய் இந்த அவணி மீது!
ஏழிசை உட்கொண்டு குரல் யாழிசையாய் பொழிகின்றாய்!
இசைக்கிசையாத உயிருமுண்டோ?! -உன்
குரலுக்கு குளிராத இதயமுண்டோ?
இனிய இசைவாழ! நீ வாழியப் பல்லாண்டு!!!!

-(மறவை REMI)


Thursday, February 12, 2009

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்பு நிறை நாடு

பாக்கிஸ்தானில் பத்துப்பேர் இறந்தாலும் பதறித்துடிப்போம்

இலங்கையிலே பத்தாயிரம் பேர் மடிந்தாலும் பதற்றமின்றி

ஆயுதம் விற்போம்-(பாரத...)

போருக்குப்பின் புனர் வாழ்வழிக்குமாம்-ஆம்

தமிழினம் அழிந்தப்பின் கல்லறைகளுக்கு கூரைப் புனையுமாம்-(பாரத...)

சாகக்கிடக்கின்றான் தண்ணீரூற்று என கேட்கின்றோம்-இல்லை இல்லை

செத்தொழியட்டும் பாலூற்றுகிறோம் என்கின்றது -(பாரத...)

உயிர் காக்க ,துயிலின்றி துப்பாக்கி ஏந்துகின்றார்கள்

அதையும் விட்டு விடு -அடிமை

சாசனம் அமைப்போம் வா என்கின்றது....

புலிக்கு புல் வைக்கப் பார்க்கின்றார்கள்..............

-(மறவை REMI)

காதல் கவிதை


சலசலப்பின்றி விழும் கருமை நிற அருவி
என்னவள் கூந்தல்.....
-(மறவை REMI)

காதல் கவிதை


தார் சாலையில் தாமரைப் பூக்களா ?
ஓ! என்னவள் நடக்கிறாளோ?...

-(மறவை REMI)


Tuesday, February 10, 2009

அடே தழிழா! மறத்தமிழா!!



அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?


உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )



முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்


கண்டுமுன் இதயம் உருகவில்லையா?


உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)


காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்


மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது


அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)


அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்


துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?


சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்


உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)



இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

-(மறவை REMI)

காமராஜர்


விருதுநகர் பெற்ற கல்வி 'விருது' அவன்
கல்விச்சாலைகளின் 'அடிக்கல்' அவன்
பொது வாழ்விலே பிழைகள் இல்லாதவன்
அரசியல் மொழியிலே சொல்லப்போனால் 'பிழைக்கத்தெரியாதவன்'
கல்விக்கண்ணின் 'கருவிழி' அவன் - தனி வழியாயிருந்த
கல்வியை பொது வழியாக்கியவன்
தனக்கென பாரில் ஏதும் 'நாடான்' அவன்
அரசியலுக்கு உண்மைப்பொருள் பொது நலம் என்றால்
தமிழ்நாடு கண்ட 'ஒரே அரசியல்வாதி' அவன்
ஏழை குழந்தைக்கு சத்துணவிட்டு கல்வி
குழந்தையை சீராட்டி வளர்த்தவன்
அந்த ஆறடி உயர பல்கலைக்கழகத்தின் நிறம் கருப்பு
கல்வி அரசே காமராஜா! இந்த உலகில் நீ ஒரு தனிப் பிறப்பு!!
-(மறவை REMI)

அன்னை தெரசா







திருமணமாகாத இந்த கன்னிக்கு

திரும்பிய திசையெல்லாம் குழந்தைகள்

அன்பே கடவுள் என்பதை மக்கள் மனதில் ஆழப்பதித்தவள்

ஜெபத்தையும் தவத்தையும் விட உதவும் கரங்களே

சிறந்தவை என்னும்

புதிய விளக்கம் தந்த பூவுலக விடிவெள்ளி....

-(மறவை REMI)

Monday, February 9, 2009

திருவள்ளுவர்

மூன்றடியில் உலகையளன்தவன் வாமனன்
இரண்டே அடிகளில் உலகையளன்தவன் வள்ளுவன்
நீ எழுத்தாணி கொண்டு மக்கள் மனதை எழுதியவன்
குரலின்றி கூட அமைந்து விடலாம் தமிழ் பேச்சு
உன் குறளின்றி அமைந்திடுமோ!!!!!
-(மறவை REMI)

மகளிர் மட்டும் பேருந்து



கவிதைளை சுமந்து வரும் தகர காகிதம்


அரசு 'மகளிர் மட்டும்' பேருந்து


-(மறவை REMI)

Sunday, February 8, 2009

தமிழ் தாயின் தலை மகன் பாரதி!!!!!


18-ம் நூற்றாண்டில் தோன்றிய 22-ம் நூற்றாண்டு சிந்தனையாளன்.

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திக்கும் தமிழமுது பொழிந்த மனித இன மாரி.

எண்ணத்திற்குட்படாத செந்தமிழை கவிதையாக்கி அள்ளி வழங்கிய பாரி.

தன் தலை முடி மீது முன்டாசு கட்டி கொண்டு தமிழன்னையின் மணி முடிமீது வைடூரியங்கள் பதித்தவன்.

அவன் சிந்தனை அணைக்கமுடியாத காட்டுத்தீ!!!

அவன்தான் எங்கள் தமிழ் தாயின் தலை மகன் பாரதி!!!!!
-(மறவை REMI)

முள் பிறப்பு........


பூவாக பிறக்கவில்லையே என வேதனைப்படாதே!

பூவுக்குள்ளும் கொடும் நாகமிருக்கும் !!

முள்ளாயிருப்பதால் வீதியில் வீழாதே! !!வேலியாயிரு

நீ! பூந்தோட்டத்திற்கே காவல் தெய்வமாவாய்....
-(மறவை REMI)

கட்டில்........!!!


ஓடி ஓடி உழைத்தவனை தன் மடியிலிட்டு தூங்க செய்யும் நான்கு கால் தாய்......
-(மறவை REMI)

புத்தன்...ஆசை...!


ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று ஆசையை துறக்கும் ஆசையில் துறவி ஆனவன்.....!

-(மறவை REMI)

Friday, February 6, 2009

காதல் வேண்டுக்கோள்!!!!!


அன்பே என் தோட்டத்து வழியே நடக்காதே!-உன் பாதம் பட்ட மண்ணில் பயிரிட்டால் பாகற்காய் கூட இனிக்கிறது
-(மறவை REMI)

முதியோர் இல்லம்


ஏறி பயணித்த பின் பயணிகள் ஓடங்களை ஒதுக்குமிடம்
முதியோர் இல்லம்.

-(மறவை REMI)

Wednesday, February 4, 2009

இந்தியா என் தாய் நாடு ????



இந்தியா என் தாய் நாடு என்று என்னால் இப்போது உளமாறு கூறமுடியவில்லை-ஏனெனில்
இழவு வீட்டிற்கு சென்று உளவு பார்க்க மாட்டாள் என் தாய்
-(மறவை REMI)

Monday, February 2, 2009

அந்தி வானமாயிரு!!


சூரியன் கண்டு ஒழியும் விண்மீனாயிராதே!
சூரியனையே வீழ்த்தும் அந்தி வானமாயிரு!!
-(மறவை REMI)